/

காதலா?  உறவா?  என்பதுதான்  கதை!

""எல்லாருமே தவறு செய்கிறவர்கள்தான். அந்தத் தவறுகளை மன்னிப்பதிலும், திருத்திக் கொள்வதிலும்தான் உறவுகளின் உயிர்ப்பு இருக்க முடியும்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:18 am

ஜி. அசோக்

""எல்லாருமே தவறு செய்கிறவர்கள்தான். அந்தத் தவறுகளை மன்னிப்பதிலும், திருத்திக் கொள்வதிலும்தான் உறவுகளின் உயிர்ப்பு இருக்க முடியும். இந்த இரண்டில் எது ஒன்று இல்லாமல் போனாலும் உறவுகளில் கசப்பு வழிகிறது. யார் மன்னிப்பது, யார் திருத்திக் கொள்வது என்கிற ஈகோவுக்கு ஜீவனுள்ள பல நல்ல உறவுகளைப் பலியிடுகிறோம். அடுத்தவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக யாருக்கோ பயந்து, நாம் காதலித்த உறவும், நம்மைச் சுற்றி இருக்கிற உறவுகளும் நிர்பந்தமாகி விடுகின்றன. இதுதான் கதை.'' படத்தின் கதை என்னவென்ற வழக்கமான கேள்விக்கு முழுக் கதையையும் சொல்லி, திறந்த மனதுடன் பேசுகிறார் இயக்குநர் இராஜமோகன். "குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' படத்தின் மூலம் அதிர்வுகளை ஏற்படுத்தியவர். நீண்ட இடைவெளிக்குப் பின் "வானவராயன் வல்லவராயன்' படத்தின் மூலம் மனம் தொட வருகிறார்.

"குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' இன்னொரு எதார்த்த முயற்சி...? "வானவராயன் வல்லவராயன்'... எப்படியிருக்கும்...?
 முதல் படம் எல்லாருக்கும் ஆசிட் டெஸ்ட் மாதிரி என்பார்கள். "குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' படத்துக்கு பல தரப்பிலிருந்தும் வந்த பாராட்டுகள் நிறைய. பாராட்டியதோடு நில்லாமல் "ஏன் அந்தப் படம் சரியாகப் போகவில்லை' என்று பலரும் காரணம் கேட்டார்கள். அப்பாவியாக நின்று "தெரியவில்லை' என்றுதான் சொல்ல முடிந்தது. கொஞ்ச நாள்கள் கழிந்த பின்னர்தான் அதில் நடந்த தவறுகளை உணர்ந்தேன். சில தவறுகளை உணரவும், அது தவறுதான் என ஏற்றுக்கொள்கிற மனசும் வந்து சேர வெகு நாள்கள் ஆகும். அடுத்த படத்தில் இந்தத் தவறு எங்கேயும் நடக்கக் கூடாது என திரைக்கதை அமைத்த நேரத்தில், என் கதையை காது கொடுக்க தயாரிப்பாளர்கள் இல்லை. சரி இப்போது ஒரு கமர்ஷியல் சினிமாதான் நமக்குத் தேவை என்பதை உணர்ந்து இதை முன்னெடுத்து வந்தேன். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவுகள் எல்லாம் சில நேரங்களில் கடமைக்கான உறவுகளாக மாறி விடுகின்றன. காதலிக்காமல் செய்து கொள்கிற கல்யாணமும் கடமைக்கான உறவுதான். காதலும், நட்பும் நாம் தேர்ந்தெடுக்கிற உறவுகள். இதில் சேர்ந்தே இருக்க வேண்டிய எந்த நிர்பந்தமும் இல்லை. கட்டாயத்தின் பேரில் உறவுகள் அமையாமல், விருப்பத்தின் பேரின் அமைவதுதான் அர்த்தமுடையது. இதை மையமாக வைத்து முழுக்க முழுக்க கமர்ஷியல் வித்தை காட்டியிருக்கிறேன்.

குடும்பத்துக்கான சினிமாவை ரசிக்க இப்போது ரசிகர்கள் இல்லை... புனிதம், மகத்துவம் என்றெல்லாம் பேசப்பட்ட சினிமாக்களை கிண்டல், கேலி செய்யும் காலம் இது... இப்படியொரு சூழலில்...?
 "ஆண் பாவம்', "சின்னத்தம்பி பெரியதம்பி' ஆகிய இரு படங்களும் கமர்ஷியலாக அண்ணன் - தம்பி உறவுகளை முன் நிறுத்திய படம். அந்த சினிமாக்களை யாரும் கிண்டல், கேலி செய்யவில்லை. இப்போதும் "ஆண் பாவம்', "சின்னத்தம்பி பெரியதம்பி' படங்களுக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த வரிசையில் இந்த "வானவராயனும் வல்லவராயனும்' இடம்பிடிக்கும். 20 வருடம் கழித்து அண்ணன் - தம்பி கதையை எடுக்க வருகிற இளம் இயக்குநருக்கு இந்தப் படமும் அடையாள அட்டையாக இருக்கும். சேர்வது நமக்குப் பிரச்னையான விஷயம் இல்லை. பிரிவது என்று வந்துவிட்டால் கண்ணீர் ஆயுதமாகி விடும். கட்டாயத்தின் பேரில் சேர்ந்தே இருக்கிற உறவுகள் பிரிந்தால் பிரச்னை இல்லை. அற்ப காரணங்களுக்காகப் பிரிகிற காதல்போல் அல்லாமல், மரணத்திலும் பிரியாமல் இருக்கிற அற்புத உறவுகள் இருக்கின்றன. அன்றாடம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சின்னதும், பெரியதுமான பிரிதல் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அதுதான் வாழ்க்கையை ஜீவனுள்ளதாக மாற்றுகிறது. எண்ணம்தான் ஒருவரைக் கொல்லுமே தவிர, அன்பு, பாசமும் எப்போதும் ஒருவரைக் கொல்வது இல்லை. பிறப்பில் இருந்தே பிரியாத அண்ணன் தம்பியை ஒரு காதல் பிரிக்க நினைக்கிறது. பிரிந்தது அண்ணன் தம்பி உறவா? இணைந்தது மனசு சம்பந்தப்பட்ட காதலா? என்பதுதான் கதை.

12 வருடங்களுக்குப் பின் சௌகார் ஜானகி.... ஆச்சரியமாக இருக்கே...?
 எனக்கே ஆச்சரியம்தான். அண்ணன், தம்பி இருவரையும் அதட்டி, பயமுறுத்த ஒரு பாட்டி வேண்டும். எல்லோருக்கும் பரிச்சயப்பட்ட முகமாக இருக்க வேண்டும் என்றுதான் யோசித்தோம். அப்போதுதான் சௌகார் ஜானகி அம்மாவின் போட்டோவைப் பார்த்தேன். நரைமுடி, முகத்தில் சதை ததும்பும் கோடுகள் என அப்படி இருந்தார். ஏற்றுக்கொள்வாரா என்ற சந்தேகத்துடன்தான் கேட்டுப் பார்த்தேன். "கதை சொல்; பார்ப்போம்' என்றார். கதை பிடித்ததும் "நான் நடிக்கிறனே' என முன் வந்தார். அண்ணனாக கிருஷ்ணா, தம்பியாக மா.கா.பா.ஆனந்த், அழகுக்கு மோனல் கஜார், முக்கியமான இடங்களில் தம்பி ராமையா, கோவைசரளா, ஜெயப்பிரகாஷ், எஸ்.பி.பி.சரண் எல்லோருமே முக்கியமானவர்கள்.

யுவன்ஷங்கர் ராஜாவோடு இன்னொரு படம் போல....?
 வாழ்க்கையைத் தரிசிக்கிற மாதிரி பாடல்கள் எனக்கு வேண்டும். "குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' கதையைக் கேட்டுவிட்டு, புதுமுக இயக்குநர் என்றுகூட பாராமல் இசை அமைத்திருந்தார் யுவன். அதற்கு முன் அப்படியொரு கதை களத்தில் அவர் வேலை செய்தது கிடையாது. ஆனால் பாடல்கள் அப்படி வந்தன. இப்போதும் அப்படித்தான். நடிகர்கள் யாராக இருந்தாலும், இசைக்கு யுவன்தான் என்பது என் தீர்க்கமான முடிவு. தயாரிப்பாளருக்குக் கதை பிடித்துப் போனதும், நான் சொன்ன முதல் வார்த்தை ""யுவன் இருந்தால் நன்றாக இருக்கும்'' என்பதுதான். ""சரி அதற்கென்ன'' என்று தயாரிப்பாளரும் ஒப்புக்கொண்டார். பொள்ளாச்சி பின்னணியில் இப்படியொரு இசையும், பாடல்களும் வந்ததில்லை. சினேகன் அருமையான வரிகள் தந்து யுவன் இசைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.